மறுபடியும் இறைவன் காலத்தை சுழற்றி நீ இறந்த நாளின் முந்தின நாளிலிருந்து.. எல்லாவற்றையும் அழித்திடமாட்டானா?
நடக்கப்போவதில்லை என்றாலும்
நப்பாசையில் கேட்கின்றேன்
அப்பா!
நீ இல்லாத பொழுதுகள்
மின்சாரம் இல்லாத வீடாய்..
மனிதர்களே இல்லாத காடாய்..
அறுக்கும் முன் கத்தும் ஆடாய்..
காட்சியளிக்கின்றது!
ஒருவனுக்கு
யாருமே இல்லையென்றால்..
அநாதை என்போம்!;
ஆனால்
எங்கள் எல்லோருக்கும்
நீ ஒருவன் இல்லையெனினும்..
நாங்கள் அநாதைதான்!
நீ இப்பொழுது
இறந்திருக்க கூடாதோ என்று தோன்றுகிறது!
காலம்சென்று நீ இறந்தாலும்
அப்போதும்
இப்படித்தான் நினைத்திருப்பேன்!
இன்னமும் நான் நம்பிக்கொண்டிருக்கின்றேன்
நீ இறக்கவில்லை
எங்கோ ஓர் இடத்தில்
நீண்ட தூக்கம்…
தூங்கிகொண்டிருக்கின்றாய் !!
நீ அமர்ந்த இருக்கை..
நடந்து வந்த பாதை..
நீ ஓட்டிய வாகனம்..
இவைகள் நீ பூமியில் உலவியதை..
எனக்குள் மறு ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றது!
மறுபடியும் நீ விழித்துப்பார்க்கும்பொழுது
உனக்கு நான் அப்பாவாகியிருப்பேன்..
நீ
உலகப்பயணம் முடித்துச் சென்ற
அந்த அதிகாலை..
முன்பே தெரிந்திருந்தால்
முந்தைய இரவில்
நிறைய பேசியிருப்பேனே அப்பா?
யாராவது திருப்பிக்கொடுங்களேன்
அப்பா இறந்தநாளின்
முந்தைய இரவினை!
கொஞ்சூண்டு…
பேசவேண்டும்
